இலங்கை தொடர்பில் கனடா குறிப்பிட்ட கருத்தை வெகுவிரைவில் முழு உலகும் குறிப்பிடும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

0 0

இதுவும் ஒருவகையான இன அழிப்பு செயற்பாடு என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.இலங்கை தொடர்பில் கனடா குறிப்பிட்ட கருத்தை வெகுவிரைவில் முழு உலகும் குறிப்பிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் பௌத்தமயமாக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்தில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாக சிங்கள குடியேற்றத்துக்காக பயன்படுத்தப்படுகிறது
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ குறிப்பிட்ட கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.இவரது கருத்தை கனடாவின் எதிர்க்கட்சி தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.இலங்கை தொடர்பில் கனடாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இன அழிப்பு இடம்பெற்றது என்பது உண்மை.இலங்கை தொடர்பில் கனடா குறிப்பிட்ட கருத்தை எதிர்காலத்தில் அமெரிக்கா ,பிரித்தானியா உட்பட முழு உலகமும் குறிப்பிடும்.

ஆகவே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையிலான விசாரணையை நடத்த அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தும் போது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து அவர்களிடம் கண்டனம் தெரிவிப்பதால் நாடு என்ற ரீதியில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.அனைத்து நாடுகளையும் பகைத்துக் கொண்டால் தனித்தே செயற்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.