உடல்நலம், மனநலம் தாண்டி இன்று சரும, உடல் அழகுக்காக மெனக்கெடுபவர்கள் அதிகம். கச்சிதமான உடற்கட்டு பெற உணவுபழக்கவழக்கம், உடற்பயிற்சி என்ற வழிமுறைகள் இருப்பினும், செயற்கை சிகிச்சை முறைகளை நாடுவது அதிகரித்து வருகிறது.
சரும அழகுக்காகவும் பல்வேறு செயற்கை வழிமுறைகள் வந்துவிட்டன. ரசாயனம் கலந்த க்ரீம்கள், உடலில் பூசக்கூடிய திரவங்கள் என பல்கிப்பெருகிவிட்டன.
இவ்வாறான செயற்கை முறைகள் உடனடித் தீர்வை மட்டும் வழங்கும். நிரந்தரத் தீர்வு வேண்டுமெனில் நமது அன்றாடப் பழக்கங்கள், உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்து சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கீழ்க்குறிப்பிட்ட இந்த 6 காரணிகள் உங்கள் உடல் அழகைக் கெடுப்பதில் பெரும்பங்கு வகிப்பவை. எனவே, இவற்றை சரிசெய்துகொண்டால் உங்களுடைய உடல் கட்டுக்கோப்பாக சருமம் அழகாக இருக்கும்.
மன அழுத்தம்
உடலில் குறிப்பிடத்தக்க ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு முதன்மைக் காரணம் மன அழுத்தம். இது சருமத்தின் வழக்கமான செயல்பாட்டை சேதப்படுத்துவதால் சருமம் பாதிக்கப்படுகிறது.
மன அழுத்தம் அதிகரிக்கும்போது சருமத்தில் ஈரப்பதம் உறிஞ்சும் தன்மை குறைகிறது. இதனால், தோல் வறண்டு, காலப்போக்கில் மெல்லியதாக காணப்படும். ஆயுர்வேத அடிப்படையில், வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று நாடிகளும் சரியான அளவில் (1:0.5:0.25) காணப்பட வேண்டும். இல்லையெனில் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும். இந்த மூன்றின் அளவுகளும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது.
தினமும் நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தூக்கம்
இரவில் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் இருந்தால் மட்டுமே அடுத்த நாள் சிறப்பாக அமையும். வெறுமனே 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதாது. சரியான நேரத்தில் தூங்க வேண்டும். இரவு 1 மணிக்கு தூங்கி காலை 8, 9 மணிக்கு எழுவது சரியாகாது.
இரவில் தூக்கமின்மை அல்லது சரியான நேரத்தில் தூக்கமின்மை சோர்வை ஏற்படுத்தும். இதனால் சருமமும் ஓய்வின்றி பொலிவிழக்கிறது. கண்ணின் கீழே கருவளையம், சருமத் தொய்வு போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இரவு 9 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழுவது சிறந்தது. இதில் ஓரிரு மணி நேரம் முன்பின் இருக்கலாம்.
ஊட்டச்சத்து
´உணவே மருந்து´ என்ற சொல்லக் கேட்டிருப்போம். அது முழுக்க முழுக்க உண்மைதான். சரியாக உட்கொள்ளும்போது உணவே மருந்தாகிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொருத்தே உங்கள் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான உடலுக்கும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்து, மென்மையான மற்றும் முகப்பரு இல்லாத சருமத்தைப் பெறுங்கள்.
சன்ஸ்க்ரீன்
சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக இன்று சன்ஸ்க்ரீன் க்ரீம்களை பயன்படுத்துவது அவசியமாகிறது.
நீங்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும்கூட, உங்கள் சருமம் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுக்க இதனை பயன்படுத்தலாம். முடிந்தவரை செயற்கை ரசாயனம் அல்லாத இயற்கையான க்ரீம்களை பயன்படுத்துவது சருமத்தைப் பாதுகாக்கும். இல்லையெனில், இந்த கதிர்கள் உங்கள் தோலில் ஊடுருவி, கொலாஜன் செல்களை பலவீனப்படுத்தி, சரும செல்களை உடைந்துவிடும்.
சுற்றுச்சூழல்
பல்வேறு வகையான சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் நம் உடலிலும் தோலிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, தார் மற்றும் எண்ணெய் போன்ற ரசாயனங்கள் முகப்பரு அல்லது அலர்ஜியை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த ரசாயனங்கள் சருமத்தில் உள்ள துளைகளை அடைக்கின்றன.
பாக்டீரியா தொற்று, முடி உதிர்தல் மற்றும் தோல் நிறமி போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். கவனமாக இல்லாவிட்டால், தீவிர காலநிலை மாற்றங்கள் உங்கள் உடலையும் தோலையும் சேதப்படுத்தும்.
மேலும், வானிலைக்கு ஏற்ப பொருத்தமான ஆடைகளை அணிவது உடலை பாதுகாப்பாக வைக்கும். காற்று கடுமையாக மாசுபடும் போது சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முகத்தை மூடியிருப்பது நல்லது.
காலையிலும் இரவிலும் உங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். சரும அழகுக்கு இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் உங்களுடைய உடலை மோசமாக பாதிக்கிறது. சருமத்திற்கு கிடைக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை அகற்றுகிறது. இதனால் தோல் தொய்வு அல்லது தோல் விரிவடைதல் ஏற்படும்.
புகைபிடித்தல் சருமத்தில் உள்ள துளைகளைத் தடுத்து முகப்பருக்களை ஏற்படுத்தும் என்பது ஒரு ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.