பல காலமாக சைவ உணவு நல்லதா, அல்லது அசைவ உணவு நல்லதா என்ற கேள்வி எப்போதும் எழுப்பப்பட்டே வருகிறது. பலரும் இதுகுறித்து பல கருத்துகளைக் கூறி வருகின்றனர். அசைவ உணவுப் பிரியர்களைப் போல சைவ உணவுப் பிரியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். சைவ உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை. அனைத்து வகையான வைட்டமின்களும், தாதுக்களும் சைவ உணவுகளில் நிறைந்து உள்ளன. நாம் உண்ணும் பருப்பில் இருந்து காய்கள் வரை அனைத்து உணவுகளுமே சைவத்தை சேர்ந்தது தான்
சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு, தற்போது பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ள உடல் எடையைக் குறைக்க சைவ உணவுகளே சிறந்ததாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன
சைவ உணவின் நன்மை குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் ஹாலந்து ஆகிய இரு நாட்டைச் சேர்ந்த பல்வேறு வயதில் உள்ள 8,000 பேர் பங்கேற்றனர். இதில், பலர் அசைவம் சாப்பிடுபவர்கள். ஆனால், அவர்கள் தற்போது சைவமாக மாற முடிவு செய்து இருக்கிறார்கள். சைவ உணவு முறையைக் கடைபிடிப்பவர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவர்கள் தான் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த ஆய்வில், அசைவத்தில் இருந்து தாவர அடிப்படையிலான சைவ உணவுக்கு அவர்கள் மாறுவதற்கான காரணங்களாக அவர்கள் கூறுவது என்னவென்றால், முதலில் இருப்பது உடல் ஆரோக்கியம் தான். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளுக்கு அவர்கள் கொடுக்கும் முன்னுரிமை போன்றவை தான் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாற விரும்புவதன் காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு, சைவ உணவை விரும்புவோர் தன்னார்வ தொண்டுகள் மற்றும் கலைகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.
சைவ உணவு என்றாலே அதில் கார்போ ஹைட்ரேட் தான் அதிக அளவில் இருப்பதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், சைவ உணவில் குறைந்த கார்போ ஹைட்ரேட் மட்டுமே கொண்ட உணவுகளும் உள்ளன. அதேபோல் சைவ உணவிலும் நீங்கள் பதப்படுத்தப்படாத உணவுகளை எடுத்துக் கொள்வதே நல்லது. ஏனெனில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் சைவமாகவே இருந்தாலும் அவை உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.